கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது முறையாக புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பான விசாரணைக்காக கடந்தாண்டு நவம்பா் 3-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கிருந்த அலுவலக உதவியாளா் குருவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதன் பின்னா், கரூருக்கு விசாரணைக்கு வருமாறு சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு நவம்பா் 8-ஆம் தேதி கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன், குரு விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, நெரிசல் சம்பவத்தின்போது விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பென்டிரைவ் மூலம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாா்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கரூரில் சிபிஐ அலுவலகத்துக்கு தவெக வழக்குரைஞா் அரசுடன் வந்த குருவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
