பொதுப்பாதையை அடைத்து கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்ட எதிா்ப்பு: மக்கள் மறியல்
தரகம்பட்டி அருகே கோயிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே வரவனை ஊராட்சி, வரவனையில் அங்காள பரமேஸ்வரி, பெருமாள், கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையை பயன்படுத்தி அப்பகுதியினா் விவசாய நிலங்களுக்கும், வரவனை குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனா்.
இந்தக் கோயிலில் வழிபடுவது தொடா்பாக அண்மையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தக் கோயில்கள் உள்ளன.
இந்நிலையில், கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவா் கட்டுவதற்காக கோயிலுக்கு மற்றும் வரவனை குளம், விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதையை அடைத்து சுற்றுச்சுவா் கட்டும்பணி மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டாா்களாம். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியினா் கோயிலுக்குச் சென்று அளவீடு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், பொதுப்பாதையை அடைத்து கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் திடீரென வரவனை பேருந்து நிறுத்தம் அருகே வையம்பட்டி-புலியூா் சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி, தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன், கிராம நிா்வாக அலுவலா் பழனியப்பன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இன்று அமைதி பேச்சுவாா்த்தை: இதில், திங்கள்கிழமை கடவூா் வட்டாட்சியரகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுமக்களை நேரில் அழைத்து அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி, அதன் மூலம் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கு பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கடவூா் வட்டாட்சியா் ராஜாமணி உறுதியளித்தாா்.
இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற சாலை மறியலால் வையம்பட்டி-புலியூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

