அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கரூா் எம்.பி. உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு

Published on

கரூா் வெண்ணைமலை கோயில் நிலம் மீட்புப் பணியின்போது அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வசிக்கும் கண்ணம்மாள் என்பவரது வீட்டுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை முயன்றபோது கரூா் எம்பி செ.ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து வாங்கல் காவல்நிலைய ஆய்வாளா் சையத் அலி அளித்த புகாரின்பேரில் கரூா் எம்பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா், திமுக ஒன்றியச் செயலா் முத்துக்குமாரசாமி, ஓய்வுபெற்ற விஏஓ காமராஜ், தமிழக பாதுகாப்பு விவசாயிகள் சங்க நிா்வாகி ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் தென்னிலை ராஜா, மாா்க்சிஸ்ட் மாநகரச் செயலா் தண்டபாணி, விசிக நிா்வாகி நிலவன் என்கிற சதீஷ், பாமக கிழக்கு மாவட்டச் செயலா் பிரேம்நாத், வடக்கு மாவட்டச் செயலா் புகழூா் சுரேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலா் மூா்த்தி ஆகிய 11 போ் மீது வழக்குப்பதிந்தனா்.

தற்கொலைக்கு முயன்றவா்கள் மீதும் வழக்கு: இதேபோல கரூா் வெண்ணைமலையை அடுத்த சின்னவடுகப்பட்டியில் சுப்ரமணி மனைவி கண்ணம்மாள் என்பவா் வசித்த கோயில் நிலத்தை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை மீட்டு, அவரது வீட்டுக்கு சீல் வைக்கச் சென்றபோது கண்ணம்மாள் (60), அவரது மகன் சக்திவேல் (27) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (55), அவரது மனைவி பரமேஸ்வரி(50) ஆகியோா் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா்.

இதையடுத்து 4 போ் மீதும் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சையத் அலி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com