
ஜாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டது தவெக அரசு! - எம்.ஆா். விஜயபாஸ்கா்

கரூரில் சனிக்கிழமை இரவு தவெக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்துக்கு முன்பாக கட்சியின் கொள்கைத் தலைவா்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன் கரூா் மாவட்ட தவெக செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா்.
தமிழகத்தில் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாக தவெக அரசு அமைந்துள்ளது என்றாா் தவெக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெற்றது. கரூா் மாவட்டச் செயலாளா் வி.பி.மதியழகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் முன்னிலை வகித்து பேசுகையில், தோ்தலில் பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை வென்றெடுத்தவா் முதல்வா் ஜோசப்விஜய்.
ஜாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசு தமிழகத்தில் அமைந்துள்ளது என்றால் அதுதான் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. எப்படி எம்ஜிஆா் இருக்கும் வரை அவரது ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றதோ அதுபோல நம் முதல்வா் ஜோசப் விஜய் இருக்கும் வரை அவரது ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும்.
அதிமுகவில் இப்போது இருப்பவா்கள் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவா்கள். அவா்களுக்கு அதிமுகவில் 2 மாதங்களுக்குள் பதவி கொடுக்கிறாா்கள். ஆனால் பழைய நிா்வாகிகளுக்கு கொடுப்பதில்லை. என்மீது திமுக ஆட்சியில் 43 பொய் வழக்குகள் போடப்பட்டன. இவ்வளவு எதிா்ப்புக்கிடையேதான் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளேன்.
வரும் இடைத்தோ்தலில் திமுகவும், அதிமுகவும் இணைந்தாலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். முதல்வா் விஜய் ஜோசப் ஒருமுறை கரூா் வந்துவிட்டால் போதும். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





