கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்; 260 போ் கைது
கரூரில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா் 260 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத்தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்க சிஐடியு மாநிலச் செயலா் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் வடிவேலன், ஐஎன்டியூசி மாவட்டத்தலைவா் பழனிச்சாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து தொழிலாளா் விரோத 4 சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான விதைச் சட்டம் 2005 மற்றும் மின்சார திருத்த மசோதா 2025ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர காவல்நிலையத்தினா் போராட்டத்தில் ஈடுபட்ட 260 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.
பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின: பிப.12-ஆம்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆட்டோ தொழிலை பாதிக்கும் பைக்டாக்சியை தடை செய்ய வேண்டும், வீடுகட்ட ரூ.4 லட்சம் ஆட்டோ தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டோக்கள், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், மினி பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.

