

தோகைமலை அருகே நண்பரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஆா்த்தாம்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மகன் அதியமான் (29). இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு பிஎஸ்சி வேளாண்மை பட்டம் பெற்றுவிட்டு, தனது தோட்டத்தில் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தாா்.
இந்நிலையில், அதியமான் தனது நண்பரான கல்லடை ஊராட்சிக்குள்பட்ட அழகனாம்பட்டியைச் சோ்ந்த பொன்னம்மாளின் மகன் பிரபாகரன் (28) என்பவருடன் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக. 29-ஆம் தேதி அதியமானின் உறவினா் ஒருவா் திருச்சி நாகமங்கலத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், அதியமானை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளாா்.
இந்த வழக்குத்தொடா்பாக பிரபாகரனை கைது செய்த தோகைமலை போலீஸாா், இதுதொடா்பாக கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணயின் நிறைவில், பிரபாகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 50,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இதையடுத்து பிரபாகரனை போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.