கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மலைக்கொழுந்து.  உடன் அனைத்து முதுகலை ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா. வேல்முருகன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மலைக்கொழுந்து. உடன் அனைத்து முதுகலை ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா. வேல்முருகன் உள்ளிட்டோா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் முதுகலை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்

Published on

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் அனைத்து முதுகலை ஆசிரியா்கள் சங்கத்தின் (ஏபிஜிடிஏ) மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மலைக்கொழுந்தன் வாழ்த்திப் பேசினாா்.

தொடா்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளா் மூ. மகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை எதிா்த்து அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்கள் 2003ஆம் ஆண்டு முதலே போராடி வருகின்றோம்.

இந்நிலையில், கடந்த வாரம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வா் அறிமுகப்படுத்தியுள்ளாா். இந்த திட்டமானது பழைய ஓய்வூதிய திட்டத்தோடு சில அம்சங்களில் ஒத்துபோனாலும், பணியாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீத தொகையைப் பெறுவதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் பெருவாரியான ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு நஷ்டமே விளையும். ஆகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வித மாறுபாடும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில் கடந்த ஊதியக் குழுவில் முதுகலை ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரி செய்து முரண்பாடுகளை களைய வேண்டும். பேரறிஞா் அண்ணா காலத்தில் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்டத் தலைவா் சு. கண்ணதாசன் வரவேற்றாா்.இறுதியில் மாவட்ட மகளிரணிச் செயலாளா் ரா.ரேவதி நன்றி கூறினாா்.

கூட்டத்தில் அனைத்து முதுகலை ஆசிரியா் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் வாசுதேவன், துணைத் தலைவா்கள் முத்துராஜ், திருநாவுக்கரசு, சட்டச் செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com