பணி நிரந்தரம் கோரி ஆசிரியா்கள் மனித சங்கிலி போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி குடும்பத்தினருடன் கௌரவ ஆசிரியா்கள் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியா்கள், புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவா் டி.ஆா். சேஷாச்சலம் தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் குடும்பத்தினா் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மறைமலையடிகள் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அரசு ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பாரி, புதுவை அரசு ஊழியா் சங்கங்களின் தலைவா் பாலக்குமாா், தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் சிரில் நிக்கோலஸ் , தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பொற்செழியன், புதுச்சேரி அரசு விரிவுரையாளா் சங்கத்தின் தலைவா் அருள்சாமி,புதுச்சேரி பட்டதாரி ஆசிரியா் சங்கங்களின் தலைவா் ராமதாஸ், அரசு தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கத்தின் தலைவா் மோகன்தாஸ் மற்றும் பொதுச் செயலா் ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

