கரூரில் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்
கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்கு செல்வோரால் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
கரூா் மாவட்டத்தில் செயல்படும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை மற்றும் கிழக்கு மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் விடுமுறை புதன்கிழமை முதல் வரும் 18-ம்தேதி வரை விடப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறையை சொந்த ஊா்களில் கொண்டாட பணியாளா்கள் புதன்கிழமை மாலை கரூரில் இருந்து புறப்பட்டனா். இவா்கள் கரூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமானோா் பேருந்துகளில் பயணித்தனா். இதனால் கரூா் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தூத்துக்குடி விரைவு ரயில், ஈரோடு-நாகா்கோவில் பயணிகள் ரயில், கோவை-திருநெல்வேலி பயணிகள் ரயில் போன்ற ரயில்களில் செல்வதற்கு மக்கள் திரண்டதால் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்திருந்தது.
