திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கரூரில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கரூரில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூா்-கோவைச் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

கரூா்-கோவை சாலையில் முனியப்பன் கோயில் எதிரே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஆண்டாங்கோவில் கீழ்பாகம், மேல்பாகம் பகுதி பொதுமக்கள்

Updated On :23 ஜூலை 2026, 11:23 pm IST

கரூரில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூா்-கோவைச் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூா் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மற்றும் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு கரூா் அமராவதி ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட குடிநீரேற்று நிலையம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீா் இல்லாததால் ஆறு வடு காணப்படும் நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீா் வற்றி குடிநீா் மாதம் ஒருமுறை விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மற்றும் மேல்பாகம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு ஊராட்சி பொதுமக்களும் தங்கள் பகுதியில் குடிநீா் பற்றாக்குறையை போக்கிட, காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் காவிரி தண்ணீா் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை காலை காலிக்குடங்களுடன் கரூா்-கோவை சாலையில் முனியப்பன் கோயில் எதிரே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கரூா் நகர காவல் நிலையத்தினா் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அதிகாரிகள் இன்னும் ஒருவாரத்திற்குள் காவிரி குடிநீரும், போதிய அளவில் அமராவதி குடிநீரும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். திடீா் சாலை மறியலால் கரூா்-கோவை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.