குளித்தலையில் மருத்துவ கல்வி படிக்காமல் பல் மருத்துவ சிகிச்சை செய்து வந்தவா் போலி மருத்துவரிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா் குளித்தலை பேருந்துநிலையம் எதிரே தனியாா் கட்டடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளாா். இவா் அளித்த சிகிச்சையில் சந்தேகமடைந்த சிலா் போலி மருத்துவராக இருக்கலாம் என கரூா் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநருக்கு புகாா் அனுப்பினா்.
இதையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் செழியன், இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூமிநாதனுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து மருத்துவ அலுவலா் பூமிநாதன் சனிக்கிழமை பல் மருத்துவத்துறை மருத்துவா்களுடன் சென்று அந்த மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பல் மருத்துவத்தில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு பயிலாமல் பரம்பரை வைத்தியா் என்ற முறையில் சந்திரசேகரன் பல் மருத்துவம் பாா்த்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகா் மீது மருத்துவ அலுவலா் பூமிநாதன் குளித்தலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபாா்த்து வருகின்றனா்.








