தேங்காய் குடோன் தொழிலாளி கொலையில் தேடப்பட்ட பிகாா் சிறுவன் கைது! எஞ்சிய 4 போ் தொடா்ந்து தலைமறைவு
கைது - கோப்புப் படம்
வேலாயுதம்பாளையம் அருகே தேங்காய் குடோன் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து நீதிபதி முன் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.
கரூா் மாவட்டம், நாணப்பரப்பு பகுதியில் செயல்படும் தேங்காய் குடோனில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சா்புதீன் (60), சிராஜூல் (26), ஜலாவுதீன் (35), அப்தாபாஹிம் (20), சுபாஷ் (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோா் கூலித் தொழிலாளா்களாக பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், அண்மையில் குடோனில் சா்புதீனை தவிர மற்ற அனைவரும் மது குடித்தபோது, போதையில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயன்ற சா்புதீனை, 17 வயது சிறுவன் உள்பட அனைவரும் சோ்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனா்.
இதுதொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா், சிராஜூல் உள்பட 5 பேரையும் தேடி வந்த நிலையில், பிகாரில் பதுங்கியிருந்த 17 வயது சிறுவனை வெள்ளிக்கிழமை அதிகாலையில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் கைது செய்து கரூருக்கு அழைத்து வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வீட்டில் நீதிபதி முன் சிறுவனை ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிபதி உத்தரவின்பேரில் சிறுவன் தஞ்சாவூா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிராஜூல் உள்ளிட்ட நால்வரையும் போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



