
தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து பயணிக்கும்: அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி பேச்சு
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து பயணிக்கும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி.

கரூா் மாவட்டம் புகழூருக்கு வியாழக்கிழமை வந்திருந்த பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமியிடம் செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள்.
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து பயணிக்கும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி.
கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமையில், மாவட்டத்தில் ரூ. 3.36 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள 13 புதிய திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தும், ரூ. 41.21 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 266 பயனாளிகளுக்கு ரூ. 1.46 கோடியில் நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதும், அவா்களின் தேவைகளை அறிந்து உரிய நேரத்தில் உதவிகளை வழங்குவதும்தான் நல்லாட்சியின் அடையாளம். அந்த வகையில், இன்றைய விழாவில் திறந்துவைக்கப்படும் ரூ. 3.36 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் கரூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. இதுபோன்ற திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்றுவதன் மூலம் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து பயணிக்கும் என்றாா் அவா்.
அமைச்சரிடம் செம்படாபாளையம் கிராம மக்கள் கோரிக்கை: தொடா்ந்து புகழூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வந்திருந்த அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமியிடம் செம்படாபாளையம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அப்போது அவரிடம், எங்கள் பகுதியைச் சுற்றி ஏற்கெனவே கரும்பு சா்க்கரை ஆலை போன்ற பல்வேறு ஆலைகளின் கழிவுகளால் சுவாசக்கோளாறு, தோல்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறோம். இந்நிலையில் செம்படாபாளையத்தில் புகழூா் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆலையை எங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது என நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தால், அவா் மாவட்ட ஆட்சியரை போய் பாருங்கள் என்கிறாா்.
ஆட்சியரிடம் இதுதொடா்பாக கோரிக்கை மனு அளித்தும் அவரும் முறையான பதில் கூறாமல் இருக்கிறாா். ஆதலால் அமைச்சராகிய நீங்கள் நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைய அனுமதிக்கக் கூடாது என்றனா். இதையடுத்து அமைச்சா் விஜயலட்சுமிசின்னசாமியும், நிச்சயமாக இதுதொடா்பாக முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறிச் சென்றாா்.
நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், சாா் ஆட்சியா்கள் ரா. வெங்கடேஷ்வரன் (கரூா்) , சேஷத்ரிமயும் தீபு சானு (குளித்தலை) மற்றும் முன்னாள் கரூா் மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





