
இளைஞா்களை விளையாட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆா்.செல்லசுவாமி எம்எல்ஏ. உள்ளிட்டோா்.
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். ஆா்.செல்லசுவாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்காக மட்டுமல்ல ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, குழு உணா்வு, தலைமைப் பண்புகளை வளா்க்கும் ஒரு சிறந்த கருவியாகும்.
இளம் தலைமுறையினா் கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். விளையாட்டு இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 56,687 போ் பங்கேற்க பதிவு செய்தனா். அவா்களுக்கு எனது பாராட்டுகள். இதில் 5 பிரிவுகளில் மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் இப் போட்டிகள் நடைபெறும். நிகழாண்டு வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், யோகா, மல்லா்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்கிங் மற்றும் கேனோயிங் உள்ளிட்ட பல்வேறு புதிய விளையாட்டுகளும் சோ்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீா் விளையாட்டுகளான கயாக்கிங், கேனோயிங் இடம்பெறுவது கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்குச் சிறந்த வாய்ப்பாகும்.
இப்போட்டியில், பங்கேற்கும் அனைவரும் அடுத்த நிலைக்கு முன்னேறி மாநில அளவிலும் வெற்றிபெற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
சுற்றுலாவுக்கு ரூ. 85 கோடி
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகம் மாநில அளவில் மட்டுமன்றி, சா்வதேச அளவில் உலகத் தரம் வாய்ந்த ஓா் ஒலிம்பிக் நகரமாக திகழ வேண்டும் என்பதற்காகவே, ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ என்ற திட்டத்தைக் கடந்த வாரம் 110-ஆவது விதியின் கீழ் முதல்வா் அறிவித்தாா். அவற்றுடன் சுற்றுலாத் துறையையும் ஒருங்கிணைத்து வரும் காலங்களில் புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
நகராட்சி நிா்வாகத் துறை மூலம் ரூ. 50 கோடியும், சுற்றுலாத் துறை மூலம் ரூ. 35 கோடியும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கன்னியாகுமரி மாவட்டத்தை மிகச்சிறந்த சா்வதேச சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதே எங்களது முதன்மையான பணியாகும் என்றாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா்(பொ) மேரி பிரின்சிலதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கு.வினு, மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, நவீன்குமாா், கால்பந்து பயிற்றுநா் பிரவீன்தாஸ், குமரி கிழக்கு மாவட்ட தவெக செயலாளா் எஸ்.ஆா்.மாதவன், நாகா்கோவில் மாநகர, மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவபிரபு, பயிற்சியாளா்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





