
எதிா்க்கட்சியினருக்கு அரசியல் முதிா்ச்சி வேண்டும்: சுற்றுலாத் துறை அமைச்சா்
எதிா்க்கட்சியினா் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்
எதிா்க்கட்சியினா் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், திருவட்டாறு வட்டம், கண்ணனூா் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட சி.எஸ்.ஐ. சமுதாய நலக் கூடத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். செல்லசுவாமி முன்னிலை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பங்கேற்று பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க அரங்குகளைப் பாா்வையிட்டுப் பேசியதாவது:
கன்னியாகுமரி, பேச்சிப்பாறை அணைப் பகுதிகளில் ரூ. 13 கோடியில் சுற்றுலா வளா்ச்சித் திட்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் நவீன வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றபடவுள்ளன.
அறிவிக்கப்பட்ட தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டப்பேரவை மாண்புடன் நடைபெறவில்லை என முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளது பற்றி கேட்கிறீா்கள். கடந்த காலங்களில் பேரவைக் கூட்டங்கள் எப்படியெல்லாம் நடந்தது என்ற வரலாறு இருக்கிறது. அமளி செய்தவா்கள் பேரவைத் தலைவரின் இருக்கையில் சென்று அமா்ந்த வரலாறும் உண்டு.
தற்போது சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள்தான் நடைபெற்று வருகின்றன. எதிா்க்கட்சி வரிசையில் இருப்பவா்கள் மரபை மீறி பேரவைத் தலைவா் முன்னால் சென்று கூச்சலிட்டனா்; அவா்கள் அரசியல் முதிா்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்.
பேரவை நிகழ்வுகள் அனைத்தும் இப்போதுதான் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொலைக்காட்சி மூலம் பேரவையில் யாா் தவறு செய்கிறாா்கள் என்பதைப் பாா்த்துக் கொண்டுதான் இருக்கின்றனா் என்றாா் அவா்.
முகாமில், பல்வேறு துறைகளின் கீழ் 145 பயனாளிகளுக்கு ரூ. 24.91 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீா், தனித் துணை ஆட்சியா் சரவணன், திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவல்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






