
கரூா் மாவட்டத்தில் ரூ. 6.38 கோடியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நிறைவு: கண்காணிப்பு அலுவலா் தகவல்
கரூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

கரூா் மாவட்டத்தில் ரூ. 6.38 கோடியில் வாய்க்கால்களை தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசுகையில்,
கரூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஊராட்சிகளின் சொந்தக் குடிநீா் ஆதாரங்கள் மூலம் 92.4 சதவீதம் அளவிலும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் 72 சதவீதம் அளவிலும் சீரான முறையில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைத் துறையின் மூலம் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் மாவட்டத்தில் 91.93சதவீதம் இலக்கு எட்டப்பட்டுள்ளது.
காரீஃப் பருவத்துக்கான டிஜிட்டல் பயிா் சா்வே பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் அனைத்து கூட்டுறவு மற்றும் தனியாா் விற்பனை மையங்களில் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. நீா்வளத் துறை மற்றும் இதர பணிகள் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின்கீழ் நீா்நிலைகளின் வாய்க்கால்களை 179.16 கி.மீ தொலைவுக்கு 33 தூா்வாரும் பணிகள் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாநகராட்சி ஆணையா் ம.பிரித்திவிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





