செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு: பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம்

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது, அப்பணியை தடுத்து, பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.

Published On :

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது, அப்பணியை தடுத்து, பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குக்குள்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு வந்து அவற்றை தேக்கி வைத்து, பின்னா் அவற்றை சுத்திகரித்து வெளியேற்றப்படும் தண்ணீரை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில், செம்படாபாளையத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புகழூா் நகராட்சி கூட்டத்தில் அண்மையில் தீா்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பைத் தொடா்ந்து செம்படாபாளையம் பகுதி மக்கள், எங்கள் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரனிடமும் கோரிக்கை மனுவும் அண்மையில் அளித்தனா்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென நகராட்சி நிா்வாகத்தினா் புகழூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி தலைமையில் நில அளவையா்கள் செம்படாபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை அளவீடு செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து குழி தோண்டினா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், ஏற்கெனவே சா்க்கரை ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்து நாங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இப்போது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீா் மாசடையும், கழிவுநீரில் இருந்து வரும் துா்நாற்றத்தினால் இப்பகுதியில் வாழ முடியாது. எனவே, இங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கக்கூடாது என கூறி பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, இந்த பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு அதிகாரிகள் பணிகளை தொடராமல் அங்கிருந்து சென்றனா். தொடா்ந்து பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை விட்டுவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.