அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போதிய மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன.

News image
Updated On :9 அக்டோபர் 2016, 6:59 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன.
மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.
கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.
இங்குள்ள 90% விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
நிகழாண்டு, சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து ஆகியவற்றை விதைத்தனர். ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்தபடி இல்லாமல், குறைவான அளவே மழை பெய்ததால், பயிர்கள் அரைகுறையாக மட்டுமே வளர்ந்துள்ளன. இதிலும் பாதி பயிர்கள் முற்றிலும் வளர்ச்சியே இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். பருவமழை ஏமாற்றியதால் மக்காச்சோள பயிர்கள் அரைகுறையாக விளைந்த நிலையிலும் கருகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது:
இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையை கொண்டு ஆடிப் பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதற்கு பின்னர் ஓரிரு முறை லேசான மழை மட்டுமே பெய்தது. தற்போது மக்காச்சோள செடிகள் வளர்ந்து வரும் நிலையில், கடுமையான வெயில் அடித்து வருவதால், அவை வாடுகின்றன. இதனால், மழையை நம்பி விதைத்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தொடர்ந்து மழையில்லையெனில், செடிகள் காய்ந்து கருகி சருகாகிவிடும். கருகிய செடிகள் கால்நடைகளின் தீவனத்துக்கு கூட உதவாது. மழையை நம்பி விதைத்து கடனாளியாகும் நிலையே உருவாகியுள்ளது. எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.