சுகாதார வளாகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்தை அகற்றி, அங்கு கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்தை அகற்றி, அங்கு கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.  
பெரம்பலூர் பெரியார் சிலை அருகில் நகராட்சி கட்டுப்பாட்டில் வணிக வளாகம் உள்ளது. அப்பகுதியில் நகராட்சி நிதியின் மூலம் அப்பகுதி மொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்பட்டது. இதை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையம் வருவோர் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்தனர்.  
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில மாதங்கள் முன் "நம்ம டாய்லெட்டை' அகற்றி விட்டு, அந்த இடத்தில் கடைகள் கட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதையறிந்த 16 ஆவது வார்டு பொதுமக்கள் கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.  தொடர்ந்து, சில நாள்களாக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், போலீஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. தகவலறிந்த கமலஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் எஸ். முத்துக்குமார், 16-வது வார்டு தி.மு.க. கிளை செயலர் கனகராஜ், மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா அன்பழகன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், கட்டுமானப் பணிகளை நிறுத்தி கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்துக்கு மனு அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு உயரதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்துகொண்டிருப்பதாகக் கூறி, நகராட்சி ஆணையரை சந்திக்க முடியாதென அங்குள்ள பணியாளர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  பெரியார் சிலை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்குசென்று, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com