போதிய வருவாய் இல்லை எனக்கூறி, பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான அரசுப் பேருந்துகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதால், கிராமப்புற மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
அதிக கிராமங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பெரம்பலூருக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கான பேருந்து வசதியை அரசுப் போக்குவரத்துக்கழகம் முழுமையாக ஏற்படுத்தித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதனால், மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மலையாளப்பட்டி, சின்னமுட்லு, பில்லங்குளம், கோவில்பாளையம், கிளியப்பட்டு, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் போதிய பேருந்து வசதியின்றி, கூட்ட நெரிசலில் சிக்கி, படிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருமண நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள் மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வர லாரி, டெம்போ, சுமை ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் பொருள் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்படுவது வேதனைக்குரியதாகும்.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளையிலிருந்து 103 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக பெரம்பலூரில் இருந்து வீரகனூர், விருத்தாச்சலம்- பண்ட்ருட்டி, பாடாலூர்- செட்டிக்குளம்- மண்ணச்சநல்லூர், களரம்பட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களும், மாணவ, மாணவிகளும் பேருந்து வசதியின்றி அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், பயணிகளின் வருகை குறைந்து வருவதாலும், வசூல் இல்லை என்ற காரணத்தையும் கூறி ஞாயிற்றுக்கிழமை தோறும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளை நிறுத்த கிளை மேலாளர் உத்தரவிடுவதால், சம்பந்தப்பட்ட கிராமமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் கூறியது:பெரம்பலூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கலெக்சன் இல்லை என்ற காரணத்தைக் கூறி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல, நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை முன்னறிவிப்பின்றி போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிறுத்தி வருகிறது. வீரகனூர்,களரம்பட்டி உள்ளிட்ட 4 வழித்தடங்களில் அதிக கலெக்சனில் இயங்கி வந்த பேருந்துகள் கூட, சில தனியார் பேருந்துகளுக்கு சாதகமாக நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்துகளை போல கலெக்சனை மட்டும் கருத்தில் கொண்டு இயக்காமல் சேவை மனப்பான்மையில் இயக்க வேண்டும்.
இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்டால், கலெக்சன் குறைவாக உள்ள பேருந்துகளை நிறுத்த மேலதிகாரிகள் உத்தரவிடுகின்றனர் எனக் கூறுகிறார். கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக கிளை மேலாளர் என். ராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்கால் என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3 டி ஸ்கேனிங், பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி

மாங்கனித் திருவிழா: திருக்கல்யாணத்துக்கு இன்று மாப்பிள்ளை புறப்பாடு

இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்





