அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போக்குவரத்து நெரிசலால் பெரம்பலூர் மக்கள் அவதி

பெரம்பலூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய

News image
Updated On :25 அக்டோபர் 2018, 3:55 am

தர்மராஜ்

பெரம்பலூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் நகரின் வளர்ச்சிக்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் நகரின் பிரதான சாலைகளில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் நிகழ்கின்றன. 
இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதை ஓட்டுநர்கள் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீரவில்லை.
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து, பெரியார் சிலை வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, தென்புறம் ஆட்டோ மட்டுமே செல்ல வேண்டும் எனவும், வலப்புறத்தில் ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. மேலும், வடதிசையில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருவழியிலும் செல்லலாம் எனவும், ஷேர் ஆட்டோக்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது எனவும், இந்த விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.ஆனால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அறிவித்த விதிமுறைகளை அரசு வாகன ஓட்டுநர்கள் உள்பட எந்த ஓட்டுநர்களும் கடைப்பிடிக்கவில்லை. இதனால், காலை, மாலைகளில் பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கடைவீதி, புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். 
பெரம்பலூரில் 600-க்கும் மேற்பட்ட 3 ப்ளஸ் 1 ஆட்டோக்கள், 40-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள், 100-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நகரைச் சுற்றியே இயக்கப்படுகின்றன. இந்த வகையான ஆட்டோக்களில் உரிமம் பெறாத ஒரு சில இளைஞர்கள் ஓட்டுநர்களாக உள்ளதால், சாலை விதிகளைப் பின்பற்றுவதில்லை. 
குறிப்பாக புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றி, இறக்க அவர்களின் விருப்பம்போல போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். 
மேலும், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்த சைகையும் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதால், தொடர்ந்து வரும் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி விபத்துகள் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரகால ஊர்தி ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். 
அண்மைக்காலமாக, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும், மதரஸா சாலையில் இருந்து காந்தி சிலை வரையிலும், புறநகர் பேருந்து நிலையம் எதிரே தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திக் கொண்டு பயணிகளுக்காக நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.  இதனால், அந்தப் பகுதியில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முறைப்படுத்தும் போக்குவரத்து காவலர்களும்,  வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸாரின் அலட்சியத்தால், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள், சாலை விதிமுறைகளை கடைப்பிடித்தாலே பெரும்பாலான போக்குவரத்து நெரிசல் குறையும். 
எனவே, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, கனரா வங்கி மற்றும் சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேவையான போக்குவரத்து காவலர்களை நியமித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.