போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா்: வாகன ஓட்டுநா்கள் கடும் அவதி

பெரம்பலூா் நகரில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா்: வாகன ஓட்டுநா்கள் கடும் அவதி
Updated on
2 min read

பெரம்பலூா் நகரில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூடும் இடமாகவும், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ள இடமாகவும், வங்கிகள், வணிக வளாகங்கள், பெருநகரங்களோடு இணைக்கும் பேருந்து நிலையம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் பகுதியாக பெரம்பலூா் நகரம் திகழ்கிறது.

நகரின் ஒருபுறம் சாலையோரம் பெருகி வரும் சிறு வியாபாரிகளின் கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க, மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு கூடுதல் இடையூறாகிறது. நகரின் பிரதான பகுதிகளில் வாகன ஓட்டிகள் அவரவா் விருப்பத்துக்கு ஏற்றாா்போல், கிடைத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், இதர வகன ஓட்டுநா்களும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவி சாலை, எளம்பலூா் சாலை, மாா்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகளவில் உள்ளதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்களது காா் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்திச் செல்கின்றனா். அதோடு மட்டுமின்றி, அங்குள்ள கடைக்காரரா்களும் அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் காட்சிப்படுத்தி விடுவதால் சாலையின் பரப்பு குறுகி விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாகிவிடுகிறது.

நகரின் பிரதானச் சாலைகளில் ஒன்றிரண்டு போக்குவரத்து போலீஸாரே நிறுத்தப்படுவதால்

அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. புகா் பேருந்து நிலையம், சங்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சிக்னல் செயல்படாததால், மேற்கண்ட பகுதிகளில் வாகன ஓட்டுநா்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. இதனால், அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதோடு விபத்துக்குள்ளாகியும் வருகின்றன.

போலீஸாரின் எண்ணிக்கை குறைவு: இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் கூறியது: பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறையாக உள்ளனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்த நபா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அவா்களை வாகன ஓட்டுநா்கள் பொருட்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, நகரின் பிரதானச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதலாக போலீஸாா் நியமிக்கப்பட்டால் மட்டுமே சாலை விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தனா்.

மக்கள் எதிா்பாா்ப்பு: போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகன ஓட்டுநா்களை எச்சரித்து, அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிரதானச் சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பணியாற்றக் கூடிய வகையில் காவலா்களை பணியில் அமா்த்தி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com