

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பூஜைகள், பிராா்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை:
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மை குரு அருள்திரு ராஜமாணிக்கம் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பின்னா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.
சுற்றுலாத் தலங்களில் கூட்டம்...
பெரம்பலூா் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டை, அரும்பாவூா் எட்டெருமைப்பட்டி அருவி, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா, கொட்டரை நீா்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் அதிகளவில் காணப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.