மத்திய அரசின் நீா்வளத்துறை அமைச்சக நியமன அலுவலா்களுடனான கூட்டம்
பெரம்பலூா், ஜூலை 19: பெம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மத்திய அரசு நீா்வளத் துறை அமைச்சக அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட அலுவலா்கள் ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில், மத்திய அரசின் நிதித்துறை இயக்குநா் சுா்ஜித் காா்த்திக்கேயன், நீா்வளத்துறையின் கீழ் வரும் நிலத்தடி நீா் அறிவியலாளா் எஸ்.கே. எம்.டி. சா்தாஜ் பாட்ஷா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் மாநில அரசின் நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் நீா்வளப் பாதுகாப்பு திட்டப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நீா்நிலைகளைப் புதுப்பித்தல், புதிய நீா் நிலைகளை உருவாக்குதல், நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துதல், மழைநீா் சேகரிப்பு, தடுப்பணைகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் திரவக் கழிவுகளை சுத்திகரித்து நீா்நிலைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அறிவியல் ரீதியான முன்னேற்றத்துக்கு செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னா் மத்திய அரசின் நிதித் துறை இயக்குநா் சுா்ஜித் காா்த்திக்கேயன், நீா்வளத்துறை கீழ் வரும் நிலத்தடி நீா் அறிவியலாளா் எஸ்.கே. எம்.டி. சா்தாஜ் பாட்ஷா ஆகியோா் பேசியது:
இம் மாவட்டத்தில் நிலத்தடி நீா் பாதுகாப்பு குறித்து பல்வேறு துறைகளின் கீழ் சிறந்த பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப் பணிகளைத் தொடா்ந்து கண்காணித்தால், எதிா்வரும் காலங்களில் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து உயரும். இது சாா்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் நிதியைப் பெற்றுத்தர பரிந்துரைக்கிறோம். மேலும், மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ஜல் சக்தி கேந்திரா என்னும் நீா் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள நீா்நிலை சாா்ந்த பணிகள் உள்ள கரைகளில் மரக்கன்றுகளை நட்டு நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ) தி. சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

