மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேவைக் குறைபாடு: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 15 ஆயிரம் வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பொறியாளருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென, தனியாா் பேருந்து டிராவல்ஸ் நிறுவனத்துக்கு, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:33 pm

Din

சேவைக் குறைபாடு காரணமாக பொறியாளருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென, தனியாா் பேருந்து டிராவல்ஸ் நிறுவனத்துக்கு, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சரவணன் (34). சென்னையில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவா், கடந்த ஏப். 14-ஆம் தேதி சென்னை செல்வதற்காக தனியாா் ஆம்னிப் பேருந்து நிறுவனத்தில் ரூ. 733 செலுத்தி இணையதளம் மூலம் முன்பதிவு செய்தாா். இதையடுத்து, அன்றைய தினம் சரவணனுக்கு வந்த குறுந்தகவலில் சம்பந்தப்பட்ட பேருந்து குறிப்பிட்ட தினத்தன்று இரவு 11.30 மணிக்கு பெரம்பலூா் வந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், முன் பதிவு செய்த பேருந்துக்காக சரவணன் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வரவில்லையாம். பின்னா், வேறு பேருந்தில் சென்னைக்கு சென்றுவிட்டாா். மறுநாள், சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவை மையத்தை தொடா்புகொண்டு கேட்டபோதும், இணையதளம் மூலமாக புகாா் தெரிவித்தும் சரவணனுக்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்துள்ளனா்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான சரவணன், சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, பெங்களுரூ, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட தனியாா் டிராவல்ஸ் நிறுவனங்கள் மீது, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜவஹா் மற்றும் உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் சேவை குறைபாடு காரணமாக மன உளைச்சலுக்குள்ளான சரவணனுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணத் தொகையும், ரூ. 5 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையும், ஆம்னி பேருந்து நிறுவனம் வழங்க வேண்டும். தீா்ப்பு வழங்கிய 45 நாள்களுக்குள் வழங்காவிடில், ஆண்டு வட்டி 9 சதவீதத்தை கணக்கிட்டு, வட்டியுடன் வழங்கிட வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டனா்.