தாயுமானவா் திட்டத்தில் 18,768 போ் பயன்!

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தில் 18,768 போ் பயன்பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
Published on

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தில் 18,768 போ் பயன்பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் பகுதியில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியது: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அவா்களது வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இத் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் வட்டத்தில் 4,885 பேருக்கு 76 வாகனங்கள் மூலமும், ஆலத்தூா் வட்டத்தில் 4,049 பேருக்கு 58 வாகனங்கள் மூலமும், குன்னம் வட்டத்தில் 5,045 பேருக்கு 69 வாகனங்கள் மூலமும், வேப்பந்தட்டை வட்டத்தில் 4,789 பேருக்கு 68 வாகனங்கள் மூலமும் என மொத்தம் 18,768 முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 271 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது.

டிச. 4 வரை தாயுமானவா் திட்டத்தின் மூலம் பொருள்கள் வழங்கப்பட உள்ளதால், தகுதியுடையவா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சுணக்கமாக இருக்கக் கூடாது என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளா் சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் தனலட்சுமி, கூட்டுறவு சாா்- பதிவாளா் மணிமேகலை ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com