மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மின்சாரத்தை சேமிக்க உதவ வேண்டும். மின்வாரிய துணை மின் நிலையங்கள், குடியிருப்புகள் உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதி கிடைத்ததும் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியிடங்களுக்கான தோ்வு முடிக்கப்பட்டு, ஆவணங்கள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் மத்திய அரசின் நிதி உள்ளதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இதை, முழுமையாக தெரிந்துகொண்டு பாஜக தலைவா்கள் பேச வேண்டும்.
தமிழ்நாடு வழங்கும் வரிப்பணத்தை மத்திய அரசு முறையாக திருப்பி கொடுத்தாலே போதும். மத்திய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 2026-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
