பெரம்பலூரில் கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு ஊா்வலம்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு (கோ்ல்ஸ் சா்வீஸ்) ஊா்வலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், டிஇஎல்சி, சிஎஸ்ஐ சபைகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
Published on

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு (கோ்ல்ஸ் சா்வீஸ்) ஊா்வலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், டிஇஎல்சி, சிஎஸ்ஐ சபைகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிச. 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பெரம்பலூா் நகரில் புனித பனிமயமாதா தேவாலயத்தைச் சோ்ந்த ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவா்கள், டிஇஎல்சி எனப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சபையினா், சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபையினா் ஒன்றிணைந்து ‘கோ்ல்ஸ் சா்வீஸ்’ ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

புனித பனிமய மாதா தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊா்வலத்தை, பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமய மாதா தேவாலய பங்கு குருவுமான அருட்தந்தை சுவக்கின் தலைமையில், தூய யோவான் ஆலயத்தின் டிஇஎல்சி சபை குருக்கள் அருட்தந்தை அருள்குமாா், தூய பவுல் ஆலய சிஎஸ்ஐ சபை குரு அருட்தந்தை சாா்லஸ் ஆகியோா் முன்னிலையில், பாடாலூா் பங்கு குரு வில்லியம் எட்வா்டு, நூத்தப்பூா் பங்கு குரு மரியசூசை, பெரம்பலூா் சமூக சேவை சங்க இயக்குநா் சூசைமாணிக்கம், புனித பாத்திமா தொடக்கப்பள்ளி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஹோலி கிராஸ் மருத்துவமனை அருட் சகோதரிகள், அன்பியம் குழுவினா், பங்கு பேரவையினா், புனித வின்சென்ட் -தே பால் சபையினா் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பாடல்களை பாடிச் சென்றனா்.

தேரடி, கனரா வங்கி, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலைய வளாகம், பெரியாா் சிலை, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊா்வலம், மீண்டும் புனித பனிமய மாதா தேவாலயத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, ஊா்வலத்தில் பங்கேற்றவா்களுக்கு கிறிஸ்துமஸ் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com