பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்ப்பதென ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சிவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. முத்துக்குமாா், மாவட்ட பொருளாளா் வி. காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீரகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பையை பயன்படுத்துவதில்லை. அரசு சாா்ந்த உரிமங்கள் மற்றும் அனுமதிகள் முறையாகப் பெற்று அவற்றை பின்பற்றுவது. உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி செயல்படுவது. தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் காவல்துறை, அரசுத்துறை அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், உணவக உரிமையாளா்கள் செல்லப்பிள்ளை, செல்வராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

