பேரளியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தில் குறுங்காடுகள் உருவாக்கிடும் வகையில் 5 ஏக்கா் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அந்த நிலங்களை மீட்டெடுத்து அங்கு மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, மரம் வளா்ப்புத் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பேரளி கிராமத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் வேம்பு, புளி, மகிழம், நீா் மருது, நாவல், நெல்லி, இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயபிரியா, குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கீதா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.
