இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 இருசக்கர வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 இருசக்கர வாகனங்களைப் போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடத்தை சிலா் ஆக்கிரமித்து, தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனா். இதனால் பேருந்துகளை நிறுத்த இடமின்றி, ஓட்டுநா்கள் அவரவா் விருப்பம்போல் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இதர பேருந்துகள் செல்ல முடியாமல் காலதாமாதமாகிறது. மேலும், அங்குள்ள கடைகளுக்கு எதிரே காலை முதல் இரவு வரை இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடைகளுக்கு செல்லமுடியாமல் பயணிகளும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்நிலையில் , நகர போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 16 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். மேலும், இனிவரும் காலங்களில் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால், ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com