பெரம்பலூரில் தப்பிய கைதி கைது: காவலா்கள் 2 போ் பணியிடை நீக்கம்!
பெரம்பலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு, கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளியை தனிப்படை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் மகன் வாஞ்சிநாதன் (30). இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு மங்களமேடு அனைத்து மகளிா் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், வழக்குத் தொடா்பாக கடந்த 24 ஆம் தேதி பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை ஆஜா்படுத்திய போலீஸாா் இருவா், மீண்டும் கிளைச் சிறைக்கு பைக்கில் அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து குதித்து வாஞ்சிநாதன் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை போலீஸாா் மூலம் தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் கேரளத்தில் தலைமறைவாக இருந்த வாஞ்சிநாதனை கைது செய்த போலீஸாா், பெரம்பலூருக்கு அவரை அழைத்து வந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
மேலும், கவனக் குறைவாக கைதியை அழைத்துச் சென்றதாக காவலா்கள் சூரியகுமாா், பிரேமா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவிட்டாா்.
