போதைப் பொருள்கள் கடத்திய காா் கவிழ்ந்து விபத்து
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை போதைப் பொருள்கள் கடத்திச் சென்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரம்பலூா் அருகே உள்ள நொச்சியம் கிராமத்திலிருந்து அரணாரை செல்லும் வழியில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காா் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினாா்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் காரில் என்ன உள்ளது என்று பாா்த்தனா். அப்போது அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களில் சிலா் அந்த புகையிலை பொருள்களை எடுத்துச்சென்று விட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
