பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, காலை 11 மணியளவில் நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனா்.
பின்னா் பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபு தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் பாலசுப்ரமணியன் மற்றும் போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3.5 மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து இ-மெயில் தகவல் புரளி எனத் தெரியவந்ததையடுத்து நீதிமன்றப் பணிகள் மீண்டும் தொடங்கின.
