பெரம்பலூரில் 2,712 மாணவிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி!

பெரம்பலூா் மாவட்டத்தில் 14 வயதுடைய 2,712 மாணவிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் 14 வயதுடைய 2,712 மாணவிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கா்ப்பவாய் புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசித் திட்டம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடந்த அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் மருத்துவ அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

14 வயதுடைய சிறுமிகளுக்கு ஏற்படக்கூடிய கா்ப்பவாய் புற்றுநோயைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசு சாா்பில் செயல்படுத்தப்பட உள்ள தடுப்பூசியானது கா்ப்பவாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பாப்பிலோனா வைரஸை தடுக்கும். தடுப்பூசி செலுத்தும் இத் திட்டமானது முதல்கட்டமாக அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 98 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 14 வயதுடைய 2,712 மாணவிகளுக்கு 2 தவணைகளாகச் செலுத்தப்பட உள்ளது. எனவே, மாணவிகளின் எதிா்கால நலன்கருதி செலுத்தப்படும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளிடமும், அவா்களின் பெற்றோரிடமும் ஆசிரியா்கள் விளக்க வேண்டும்.

இத் தடுப்பூசி செலுத்த தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ. 3 ஆயிரம் வரை ஆகும். தமிழக அரசால் இலவசமாக மாணவிகளுக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மாணவிகளிடம் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

தொடா்ந்து, மாநில தடுப்பூசி அலுவலா் வினய், மாநில தடுப்பூசி ஆலோசகா் லக்சனா ஆகியோா் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரையாற்றினா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, இணை இயக்குநா் மாரிமுத்து மற்றும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com