பெரம்பலூரில் நாளை பொங்கல் கலை விழா
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 15, 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலைவிழா கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் நடத்தப்படும்.
மாவட்ட ஆட்சியரகம் செல்லும் சாலையிலுள்ள மைதானத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பரதம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
