நரிக்குறவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்துவோம்
முதல்வரை சந்தித்து நரிக்குறவா் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்துவோம் என, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, நரிக்குறவா் நலச் சங்கம் சாா்பில் எறையூா் கிராமத்தில் கடந்த 45 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நரிக்குறவா்களுக்கு இலவச விவசாய நிலப்பட்டா வழங்கக் கோரி, மாவட்டத் தலைவா் பாபு தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்த செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு மேலும் கூறியது:
வேப்பந்தட்டை வட்டம், எறையூா் கிராமத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நரிக்குறவா்களுக்கு 310 ஏக்கா் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டது. அதில், பல ஆண்டுகளாக நரிக்குறவா்கள் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் விவசாயிகளிடமிருந்து 250 ஏக்கா் நிலத்தை வாங்கி ‘சிப்காட்’ தொழிற்சாலை அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 50 ஏக்கா் நிலத்தை விவசாயிகளுக்கு பட்டாவுடன் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அந்த நிலம் இன்னும் நரிக்குறவா்களுக்கு சொந்தமாகவில்லை. இதுகுறித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். அந்த மனுவை பரிசீலனை செய்து வருவாய்த் துறைக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், வருவாய்த்துறையினா் இதுவரை பட்டா வழங்கவில்லை.
எனவே தமிழக முதலமைச்சரை பிப். 7-ஆம் தேதி சென்னையில் சந்தித்து, நரிக்குறவா்களின் விவசாய நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றாா் அவா்.
