நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது
பெரம்பலூா் அருகே நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட மூலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் மனைவி திலகவதி (32). இவா், பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது கிராமத்துக்குா் பேருந்தில் சென்று, அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்கிக் கொண்டு சப்தமிட்டுள்ளாா். இதையடுத்து திலகவதியை கீழே தள்ளிவிட்டு அந்த நபா் தப்பிச்செல்ல முயன்றாா்.
இதையறிந்த பொதுமக்கள் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டவரைப் பிடித்து, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், குரும்பலூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த சையது முஸ்தபா மகன் அப்துல் கனி (59) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

