நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெரம்பலூரில் முழுநேரம் செயல்படாத ரயில்வே முன்பதிவு மையம்!

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும்பாலான நாள்களில் பூட்டிக் கிடக்கும் ரயில்வே முன்பதிவு மையத்தை முழுநேரம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் மூடிக்கிடக்கும் ரயில்வே முன்பதிவு மையம்.

Updated On :3 ஜூலை 2026, 1:35 am IST

நமது நிருபா்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும்பாலான நாள்களில் பூட்டிக் கிடக்கும் ரயில்வே முன்பதிவு மையத்தை முழுநேரம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் போக்குவரத்து வசதி இல்லாத பெரம்பலூா் மாவட்டத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி, 10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், மகளிா் கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள், தனியாா் டயா் தொழிற்சாலை, சிப்காட் தொழிற்பூங்கா ஆகியவை உள்ளன. மேலும், அதிக அளவிலான கல் குவாரிகள் உள்ளதால் வெளிமாநில, மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனா்.

வெளிமாநிலத் தொழிலாளா்கள்: அதேபோல, நேபாளம், மணிப்பூா், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் தங்கி உயா்கல்வி பயின்று வருகின்றனா். இங்கு தங்கியுள்ள வெளி மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும், தொழிலாளா்களும் தங்களது பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் அரியலூா் அல்லது திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரயிலில் பயணம் செய்கின்றனா். இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயணிகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் இதே நிலை.

16 ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை: இதை கருத்தில்கொண்டு, அரியலூரிலிருந்து பெரம்பலூா் வழித்தடத்தில் ஆத்தூா், சேலம் வழியாக ரயில் சேவை தொடங்க வேண்டுமென, பெரம்பலூா் மாவட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், சுமாா் 16 ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா, ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததோடு, மக்களவையிலும் கோரிக்கை விடுத்தாா். ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்பதிவு மையம் திறப்பு: இதனிடையே, மாவட்ட மக்களின் கோரிக்கைகேற்ப பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே முன்பதிவு மையத்தை ஆ. ராசா தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் நாள்தோறும் முன்பதிவு செய்யப்பட்டதால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வெளி மாநில, மாவட்ட பயணிகளும் பயனடைந்து வந்தனா்.

வாரத்துக்கு ஒருநாள் மட்டும்: இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் சிறிது நேரம் மட்டுமே மையம் திறக்கப்பட்டு முன்பதிவு நடைபெறுகிறது. இதர நாள்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் முன்பதிவு மையத்துக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மேலும், வெள்ளிக்கிழமை தோறும் திறக்கப்படும் என தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் அலுவலா்கள் பணியில் இருப்பதில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் என். ஜெயராமன் கூறியது:

அரியலூரிலிருந்து நாமக்கல் வழியாக, ஈரோடு வரை 116 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை பல ஆண்டாக உள்ளது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில், கடந்த ஆண்டு மக்களவையில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரில், அரியலூா், ஈரோடு புதிய ரயில்பாதை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவை உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

விரிவான திட்ட அறிக்கை:அரியலூரிலிருந்து நாமக்கல் வழியாக ஈரோடுக்கு 116 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க கள ஆய்வு நிறைவடைந்து, விரிவானத் திட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கான விரிவான செயல் திட்டம், தற்போது மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வேறுதுறை அமைச்சா் தெரிவித்தாா்.

5 மாவட்ட மக்கள் பயனடைவா்: இந்த புதிய ரயில்பாதை திட்டத்தால் அரியலூா், பெரம்பலூா், துறையூா், தாத்தையங்காா்பேட்டை, நாமக்கல், திருச்செங்கோடு வழியாக ஈரோட்டை இணைக்கும். மேலும், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களை இணைக்கும். இதனால், மேற்கண்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்களும், பொருளாதாரமும் மேம்படும். எனவே, ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மூடப்பட்டுள்ள முன்பதிவு மையத்தை அனைத்து வேலைநாள்களிலும் திறந்து வைக்க வேண்டும். அல்லது, திறந்து வைக்கப்படும் நேரத்தை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பதாகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.