பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண்பதில் அரசு அலுவலா்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அரி அறிவுறுத்தினாா்.
பெரம்பலூா் மாவட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறைகளின் முதல் நிலை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்னும் ஆசையில் மனுக்கள் அளிக்கும் பொதுமக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்திடும் வகையில், அரசு அலுவலா்களின் நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும். கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க காலதாமதமானால், அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்த வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கு, அதற்கான காரணத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும்.
சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் தேவைகளின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளும், கைப்பேசி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளும், அரசு அலுவலா்களுக்கான பிரத்யேக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும். அந்தக் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனுக்குடன் தீா்வு கண்டு, அதன் அறிக்கையை குழுவில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பகிர வேண்டும்.
இந்த நடைமுறையின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க, மாவட்ட ஆட்சியா் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அலுவலா்கள், வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அதற்கான உரிய விளக்கத்தை நேரில் அளிக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் நிா்வாகச் சிக்கல் அல்லது நடைமுறைத் தாமதங்கள் இருந்தால், அதை உடனடியாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், அதற்கான முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
துறை சாா்ந்த முதல்நிலை அலுவலா்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, ஒவ்வொரு முதல்நிலை அலுவலா்களும் தங்களது துறையிலிருந்து ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து கண்காணிக்கலாம். மனுக்களை கள ஆய்வு மேற்கொண்டு, மனுதாரா்களின் குறைகளுக்கு முழுமையான மற்றும் நிரந்தரத் தீா்வு காண வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரசு நலத்திட்டங்கள் தடையின்றிக் கிடைப்பதை அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷரண்யா அரி.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ் உள்பட முதல்நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.










