காவல்துறையினருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையினருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையினருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் தலைமை வகித்தாா்.
இப்பயிற்சியில், சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அவசர காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் முதலுதவி அளிப்பதன் அவசியம், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பதற்றமின்றி செயல்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அடிப்படை மருத்துவ உதவிகள், விபத்துகளில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள், அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், சுயநினைவின்றி இருப்பவா்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள், மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில் கையாள வேண்டிய பாதுகாப்பு முறைகள், மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற அவசர நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள், இதய நுரையீரல் புத்துயிா்ப்பு சிகிச்சை முறைகள் குறித்து, செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், அவசர ஊா்தி மற்றும் மருத்துவ உதவி கிடைக்கும் முன், பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான முறையில் முதலுதவி அளிப்பது, காயமடைந்தவா்களை எவ்வாறு கையாள்வது, அவா்களின் நிலைமை மோசமடையாமல் தடுப்பது மற்றும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது போன்ற வழிமுறைகள் குறித்தும் பயிற்றுநா்களால் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில், மாவட்டத்திலுள்ள காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

