சொந்த நிலத்தில் வேப்பந்தோப்பை உருவாக்கிய பேராசிரியர்
பொதுவாகவே சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் நெல், கரும்பு உள்ளிட்ட உணவு தானியங்களை உற்பத்தி செய்வதிலேயே


பொதுவாகவே சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் நெல், கரும்பு உள்ளிட்ட உணவு தானியங்களை உற்பத்தி செய்வதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். வேளாண் பணியை நேரடிப் பார்வையில் செய்ய இயலாதவர்கள் சுமார் 4, 5 ஆண்டுகளில் பயன்தரக்கூடிய தென்னை மரங்களை நடவு செய்து அதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் அன்றாடமோ, சில பல ஆண்டுகளிலோ எவ்வித நேரடிப் பயனையோ, வருவாயையோ பெரிதாகத் தரமுடியாத வேம்பு மரங்களை தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வளர்த்து மரம் வளர்க்கும் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் புதுகையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே தக்கிரிப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வேப்பந்தோப்பை உருவாக்கியது குறித்து புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆர். கருப்பையா (54) கூறியது:புதுக்கோட்டை மாவட்டத்தில் பாறைகள் நிறைந்த பகுதியாக உள்ள தக்கிரிப்பட்டி வறட்சியான பகுதி. இங்கு சிறுதானியங்களை பயிரிடுவதுகூட கடும் சவாலாகவே உள்ளது. இதன்காரணமாக பெரும்பாலான விளைநிலங்கள் தரிசு நிலங்களாகவே உள்ளன. நான் கல்லூரி மாணவராக இருந்தபோது தோட்டத்தில் கால்நடை தீவனப்புல் மரத்தை நல்ல முறையில் வளர்த்ததற்காக திருச்சி வனத் துறையினர் சார்பில் எனக்கு பரிசு கிடைத்தது. அந்த நிகழ்வுதான் மரம் வளர்க்கும் ஆர்வத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தக்கிரிப்பட்டி, காவேரி நகர் பகுதியில் உள்ள பொதுஇடங்களிலும், அதேகிராமத்தில் உள்ள கண்மாய்களிலும், குளத்திலும் சுமார் 200 கன்றுகள் எனது முயற்சியால் நடப்பட்டது. ஆனால் பொதுஇடங்களில் மரக்கன்று நடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து எனது 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2013-ல் சுமார் 500 வேப்பமரக்கன்றுகளை நட்டு வளர்த்தேன். 3 ஆண்டுகளில் வேப்பந்தோப்பாக மாறியுள்ளது. வறட்சி காலத்தில் தண்ணீர் ஊற்ற நேரிட்டது. கடந்த 6 மாதங்களாக தண்ணீர் ஊற்றும் சூழ்நிலை ஏற்படவில்லை. தற்போது காய்ப்பு தொடங்கிவிட்டது.
அரிதாகிவிட்ட வேம்புவின் தேவை அதிகரித்து வருவதால், இன்னும் 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கு விதைகளை விற்பனை செய்யலாம்.
மேலும் எனது தோப்பில் ஏராளமான பறவைகள் கூடுகட்டித் தங்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பறவைகள் மூலம் விதை பரவலாக்கம் செய்யப்படும்போது இயற்கையாகவே இப்பகுதியில் வேப்பங்காடு உருவாகிவிடும். தைலமரங்கள் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை. எனவே, அதற்குப் பதிலாக வேப்பமரங்களை வளர்த்தால் கூடுதல் லாபம் பெறலாம்.
நான் உருவாக்கியுள்ள வேப்பந்தோப்பானது எங்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல இந்தப்பகுதியினருக்கே ஆரோக்கியத்தைக் கொடுக்கும். சுற்றுச்சூழலும் மேம்படும். இதை மற்றவர்களும் பின்பற்றினால் தமிழகம் சுகாதாரத்தின் அரணாக மாறும். எனது நோக்கமும் நிறைவேறும் என்றார்.
வேப்ப எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும், இலை கொசு விரட்டியாகவும், இயற்கை பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. மரப்பட்டை காய்ச்சலை போக்கவும் பயன்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...