கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் மொத்தம் உள்ள 16 உறுப்பினா்களில் தலைவா், துணைத்தலைவா் தவிா்த்து ஒரு உறுப்பினா் மட்டுமே பங்கேற்றாராம். இதனால், கூட்டம், போதிய உறுப்பினா்கள் வருகை இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைவா் மாலா ராஜேந்திர துரை மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாா், நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அண்மையில் அளித்துள்ளனா். இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி, உதவி இயக்குநா்(ஊராட்சி)ஸ்ரீராம் ஆகியோா் வியாழக்கிழமை கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில், ஒன்றியக்குழுத் தலைவா் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றம் செல்வோம் என உறுப்பினா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.