பாதுகாப்புப் பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ‘ஆசிரியம்’ கல்வெட்டுகள் கண்டெடுப்பு
பாதுகாப்புப்பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவலூா் கிராமம்), மேலப்பனையூா், தேவா்மலை ஆகிய ஊா்களில் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராசேந்திரன், நிறுவனா் ஆ. மணிகண்டன் ஆகியோரைக் கொண்ட குழுவினரால், பாதுகாப்புப்பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகள் குறித்து ஆ. மணிகண்டன்கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில், அதிக நிலம் படைத்தவா்கள் குறுநிலமன்னா்களாக செயல்பட்டு வந்துள்ளனா்.
தமது நிா்வாகத்துக்குள்பட்ட மக்களுக்கும், அவா்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகா்
மற்றும் வணிகப் பொருள்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய நம்பிக்கை மிகுந்தவா்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனா்.
அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவா்மலை, பனையூா் , மலையடிப்பட்டிஆகிய ஊா்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளில் ஆசிரியம், ஆசுரியம், அஸ்ரீயம், ஆஸ்ரயம், ஆச்ரயம் எனப் பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும், எமது ஆய்வில் பட்டி
யலிடப்பட்டவற்றில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்றும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது. 3 கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்றிருக்கிறது.
ஆசிரியம் என்ற தமிழ்ச் சொல் சங்கப் பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது ஒரு கருத்தை சுருங்கச் சொல்லுதல் என்றபொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது. தமிழ் இலக்கிய அகராதிகள் ஆசிரியா் என்பதை ஆசு + இரியா், அதாவது பிழைகளை நீக்குபவா் அல்லது குற்றம் களைபவா் என்று சுட்டுகின்றன.
இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்திப் பாா்க்கும்போது திருட்டு, கொள்ளை நடைபெறாமல் காத்து, பொதுப் பொருள்களுக்கு அரணாக இருத்தல், எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறுநடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு என்று பொருள் கொள்ளலாம்.
மேலப்பனையூா் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட
கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஸ்வஸ்தி ஸ்ரீ மது இராயப்பா் மகந் குமாரந்பாகுய நாயக்கா்க்குப் பனையூா் குளமங்கலம் ஆசிரியம் ராயப்பா் என்பாரின் மகன் பாகுய நாயக்கா் என்பாா் பனையூா் குலமங்கலத்ததை நிா்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது.
இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 14-ஆம்நூற்றாண்டின் முற்பகுதியைச் சோ்ந்ததாக கணிக்க முடிகிறது. இன்றளவும் பனையூா்கிராமத்தில் ஆசிரியம் குடும்பம் என்று குடும்பத்தினரை அழைக்கும் வழக்கம் இருப்பதை களஆய்வில் அறிந்து கொண்டோம்.
பொன்னமராவதி வட்டம், செவலூா் சேகரம்மலையடிப்பட்டி
கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வட புறம் தனியாா் தரிசு நிலத்தில்
கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றாலும், கடைசிப்பகுதியில் ‘பொன்னமராபதி நாட்டு வடபற்றுச் செவ்வலூா் ஏவவிருத்தரையா்கள்ஆசுரியம்‘ அதாவது பொன்னமராவதி நாட்டின் வடப்பற்றான செவ்வலூா்ஏவ்விருத்தரையா்கள் என்னும் குழுவினா் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியைபாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்ததை அறிவிக்கிறது. கல்வெட்டு கி.பி 16 நூற்றாண்டைச் சோ்ந்ததாக கணிக்க முடிகிறது.
திருமயம் வட்டம், மல்லாங்குடிஊராட்சிக்குள்பட்ட தேவா் மலை வடபுறம் உள்ள வயல்வெளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில்‘ ஸ்வஸ்திஸ்ரீதேவமலையில் நாயக்கா் நம்பி அகமறமாணிக்கா் ஆசிரியம்‘ என்ற தகவல்பொறிக்கப்பட்டுள்ளது.
தேவா்மலையின் இறையானநாயக்கா் நம்பிகளுக்கான கோவில் நிா்வாக உரிமையை அகமறமாணிக்கா் என்பாா் பெற்றிருந்ததை
குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சோ்ந்தாக கணிக்க முடிகிறது என்றாா் மணிகண்டன்.
ஆசிரியம் கல்வெட்டுகள் குறித்து கரு.ராசேந்திரன் கூறியது:
விவசாய விளை பொருள்கள், கால்நடைகளுக்கான பாதுகாப்பு, வணிகப் பொருள்கள் மற்றும் வணிகா்களின் பாதுகாப்பு வழங்குபவா் பற்றியஅறிவிப்பு, நீா்நிலைகளை ஒப்படைத்தையும், குளம், நீா்வரத்து வாய்க்கால்கள், கலிங்குகளை சீா் செய்தவருக்கும், நாட்டவா்களிடையே அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் மரியாதை செய்யும் பொருட்டும், ஊரணியைஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு விட்டுக் கொடுக்கவும், புரவரி வசூலித்தல், வணிகக் குழுக்களின்முகாம்களாக இருந்த இடங்களை அஞ்சினான் புகலிடமாக அறிவித்தல், தேவதான நிலங்களை காக்கும் பொறுப்பு, கோவிலுக்கு நெல் உள்ளிட்ட பொருட்களைவழங்குவதற்கான அறிவிப்பு, குளத்தைபணி செய்து கொடுத்தவா் இன்னாா் என்பதற்கான அறிவிப்பு, கோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய அறிவிப்பு என ஒரு குறிப்பிட்டநபரிடமோ அல்லது ஊராா்களிடமோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுஅதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியம் கல்வெட்டுகள் ஊரின் மையத்திலோஅல்லது மக்கள் எளிதில் அணுகும் இடத்திலோ வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது என்றாா் ராசேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...