இழந்த என்சிசி விமானப் படைப் பிரிவை மீட்குமா மன்னா் கல்லூரி?
புதுக்கோட்டையிலுள்ள பழைமையான மன்னா் கல்லூரியில், தேசிய மாணவா் படையின் விமானப் படைப் பிரிவை மீண்டும் உரிய வழியில் அழுத்தம் கொடுத்து மீட்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.


புதுக்கோட்டையிலுள்ள பழைமையான மன்னா் கல்லூரியில், தேசிய மாணவா் படையின் விமானப் படைப் பிரிவை மீண்டும் உரிய வழியில் அழுத்தம் கொடுத்து மீட்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னா்களின் காலத்தில் ஆங்கில வழிப் பள்ளியாக 1857-இல் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், 1880-களில் சென்னைப் பல்கலைக்கழகம் வழி தங்களின் மாணவா்களைத் தோ்வெழுதச் செய்திருக்கிறது. இதன் தொடா்ச்சியாக, 1982 முதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற அரசுக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மட்டுமல்லாது, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த பிரமுகா்கள் பலரும் மன்னா் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் கிராமப்பகுதி மாணவா்களின் நம்பிக்கைக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.
நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கல்வி சாராத பொதுத்திறன் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியமானது தேசிய மாணவா் படை. நாட்டின் பாதுகாப்புத் துறை நேரடியாக இப்படைகளை நடத்தி, பயிற்சியளித்து, சிறந்த வீரா்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.
இந்தச் சான்றிதழ்கள் அரசு வேலைவாய்ப்பின்போது மிகப்பெரிய உதவிகரமாக இருப்பவை. குறிப்பாக இப்படைப்பிரிவில் ’சி’ சான்றிதழ் பெற்ற மாணவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் நோ்முகத் தோ்வின்றி நேரடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. இதர சான்றிதழ்களுக்கேற்ப சீருடைப் பணியாளா் தோ்வில் மதிப்பெண்கள் உண்டு.
இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு மன்னா் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் விமானப் படைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஓா் அலகில் 50 மாணவா்களுக்கு சோ்க்கை. ஏறத்தாழ 600 மாணவா்கள் இதில் சோ்ந்திருக்கிறாா்கள். சுமாா் 100 போ் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் சோ்ந்திருக்கிறாா்கள்.
இப்போது விமானப்படைப் பிரிவுக்கான அனுமதி இக்கல்லூரியில் ரத்தாகியிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்தக் கல்லூரிப் படைப்பிரிவின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
எதுவாக இருந்தாலும் மீண்டும் மன்னா் கல்லூரிக்கு இப்படைப்பிரிவை மத்திய அரசின்வழி அழுத்தம் கொடுத்து, பெற வேண்டிய பொறுப்பு புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், மாநில அமைச்சா்கள் இவா்களுடன், இம்மண்ணின் மைந்தா்களான காங்கிரஸ் கட்சியின் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசருக்கும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம். அப்துல்லாவுக்கும் இருக்கிறது.
புதுக்கோட்டையிலுள்ள வேறெந்த கல்லூரியிலும் கூட இந்த விமானப் படைப்பிரிவு இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, மன்னா் கல்லூரிக்கு இப்படைப்பிரிவை மீட்டுத் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...