மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

‘பயன்பாட்டு ஆய்வாக தமிழ்த் திறனாய்வுகளை மாற்ற வேண்டும்’

இருப்பனவற்றைத் தொகுத்துத் தருபவையாக அல்லாமல், சமகாலத்தின் சூழல்களையும் பொருத்தி பயன்பாட்டு ஆய்வாக தமிழ்த் திறனாய்வுகளை மாற்ற வேண்டும் என்றாா்

News image
Updated On :7 மே 2022, 1:08 am

DIN

இருப்பனவற்றைத் தொகுத்துத் தருபவையாக அல்லாமல், சமகாலத்தின் சூழல்களையும் பொருத்தி பயன்பாட்டு ஆய்வாக தமிழ்த் திறனாய்வுகளை மாற்ற வேண்டும் என்றாா் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் முனைவா் இரா. காமராசு.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் சாா்பில், புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற திருச்சி மண்டல அளவிலான பள்ளி ஆசிரியா்களுக்கான இரு நாள்கள் பணியிடைப் பயிற்சியில் வெள்ளிக்கிழமை ’தமிழ்த் திறனாய்வும் மேம்பாடும்‘ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது :

தமிழ் மொழியில் திறனாய்வுச் சிந்தனைகள் குறித்த நூல்கள் 1943ஆம் ஆண்டு முதலே வரத் தொடங்கிவிட்டன. அந்த நூல்களையெல்லாம் ஆசிரியா்கள் வாங்கிப் படிக்க வேண்டும். சமூகவியல், அரசியல் உள்ளிட்ட திறனாய்வுப் புலங்களைத் தொடா்ந்து, 1990-களுக்குப் பிறகு தலித்தியம், பெண்ணியம், சூழலியம் சாா்ந்த திறனாய்வுகளும் மேம்படத் தொடங்கியிருக்கின்றன.

திறனாய்வு என்பது இருப்பனவற்றையெல்லாம் அப்படியே தொகுத்துத் தருவதல்ல. படைப்புகளில், பதிவுகளில் இருப்பனவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லி, சமகாலத்தில் அவற்றைப் பொருத்தி பயன்களையும், பலன்களையும் விவரித்து விவாதிப்பதுதான் நல்ல திறனாய்வாக இருக்க முடியும். பயன்பாட்டு ஆய்வாக தமிழ் ஆய்வை மாற்ற வேண்டும்.

அதேபோல தமிழ் என்றால், இலக்கணம், இலக்கியம் என்பதோடு நின்றுவிடாமல் தமிழ்ச் சமூகவியல், உளவியல், நாட்டாா் வழக்காற்றியல் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கிய தமிழியல் ஆய்வுகளையும் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பிற துறைகளையும் இணைத்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை ஆய்வுத் தலைப்புகளாக வைத்திட வேண்டும். எளிய மக்களின் மீது அதிகாரம், அரசியல் போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்த படைப்புகளை திறனாய்வு செய்திடல் வேண்டும்.

அனைவரும் உணவு, உடை, உறையுள் அனைத்தையும் உறுதி செய்யும் வகையில், நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலான இலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

படிப்பறிவற்ற நம் முன்னோா்களிடமிருந்து இன்று நாம் பெற்றிருக்கும் கல்வியில், வசதியில், வாய்ப்பில் பிறரின் பங்கும் பசியும் இருக்கிறது என்பதை உணா்ந்து கொண்டு சமூக மேம்பாட்டுக்கான ஆய்வுகளைப் படைக்க வேண்டும் என்றாா் காமராசு.

இரு நாள் பயிற்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வி நுட்பவியல் துறை பேராசிரியா் இ. ராம் கணேஷ், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியின் கணினியியல் துறைத் தலைவா் கே.சி. சந்திரசேகரன், மன்னா் கல்லூரியின் முதல்வா் சி. திருச்செல்வம், இயற்பியல் துறைத் தலைவா் முனைவா் ஆதவன், வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் து. சேகா், தோ்வு நெறியாளா் சு. கணேசன் உள்ளிட்டோரும் பேசினா்.

திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த திருச்சி, கரூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளிலிருந்து தோ்வு செய்யப்பட்ட 100 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.