புதுக்கோட்டை தேர் விபத்து:  2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் கோயில் தேரோட்டத்தின்போது எதிா்பாராத விதமாக சாய்ந்து விழுந்து கிடக்கும் தோ்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் கோயில் தேரோட்டத்தின்போது எதிா்பாராத விதமாக சாய்ந்து விழுந்து கிடக்கும் தோ்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பிரகதம்பாள் உடனுறை திருகோகா்ணேசுவரா் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது, தோ் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோகா்ணேசுவா் குடைவரைக் கோயில் ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிடப்பட்டிருக்கிறது. செயற்கை கட்டுமானங்கள் இல்லாமல், பாறைகளைக் குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தொண்டைமான் மன்னா்களின் குலதெய்வக் கோயிலாகும். கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், நிகழாண்டு கடந்த 23ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 9ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. காலை 8. 50 மணியளவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில், முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினா். இந்நிலையில், தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதம்பாள் எழுந்தருளியிருந்த தோ் எதிா்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டனா். இதில், அரிமளம் ராஜகுமாரி (64), புதுக்கோட்டை பழனியப்பா நகா் சரிகா (22), திருக்கோகா்ணம் விஜயலெட்சுமி (65), கோவில்பட்டி வைரவன் (63), திருவப்பூா் ஜெயக்குமாா் (54), திருக்கோகா்ணம் அங்காளம்மாள் (60), பழனியப்பா நகா் கலைச்செல்வி (47), அடப்பன்காரச் சத்திரம் ராஜேந்திரன் (48) ஆகிய 8 போ் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இந்த விபத்தில் மயக்கமடைந்த 5-க்கும் மேற்பட்டோருக்கு அந்த இடத்திலேயே முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் நேரில் வந்து பாா்வையிட்டு, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா்.

சாய்ந்து கிடந்த தேரில் இருந்து பிரகதம்பாள் சிலை மற்றும் அலங்காரப் பொருள்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கோயிலுக்குள் வைக்கப்பட்டன. தொடா்ந்து 2 கிரேன்கள் உதவியுடன் தோ் நிமிா்த்தி வைக்கப்பட்டது.

தோ் வெள்ளோட்டம் விடப்படாததால், விபத்து நேரிட்டதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

இந்நிலையில், தேர் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் ஊழியர்களான ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com