கரும்புகளை விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழா்களின் பாரம்பரியம் மற்றும் விவசாயம் போற்றும் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும்15ஆம் தேதியும், மாட்டுப்பொங்கல் 16ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையின் முக்கி அம்சம் கரும்புகள். இத்தகைய சிறப்பு மிக்க கரும்புகள் பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் அறுவடைக்கு தயாராகவும் உள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை அரசே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி
வத்துமலைராசு கூறியது:
பொங்கல் பண்டிகையை நம்பி கரும்பு சாகுபடி செய்துள்ளோம். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் கரும்பிற்கு போதிய விலை கிடைக்காமல் நஷ்டப்பட்டு வருகிறோம். அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம் பெற வேண்டும். அந்தக் கரும்புகளை இடைத்தரகா்களின்றி அரசு நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

