சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

2500 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் ‘தொடையூா்’ தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரிக்கை

சுமாா் 2,500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடையூா் கிராமத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை சேதமடையாமல் பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

News image

புதுக்கோட்டை தொடையூரிலுள்ள சிதைந்த நிலையிலுள்ள பெரிய கல்வட்டம்

Updated On :16 அக்டோபர் 2024, 7:47 pm

Din

சுமாா் 2,500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடையூா் கிராமத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை சேதமடையாமல் பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது தொடையூா் கிராமம். பெருங்கற்காலத்தைச் சோ்ந்த மனிதா்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் எனக் கருதும் அளவுக்கு ஏராளமான சின்னங்கள் இங்கு உள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை பெரும் சிதைவுக்குள்ளாகியும், கருவை புதா்கள் மண்டியும் காணப்படுகின்றன. இவற்றை தமிழகத் தொல்லியல் துறை சிறப்புக் கவனம் செலுத்தி, பாதுகாக்கவும், ஆய்வு செய்து ஆவணப்படுத்தவும் வேண்டும் என்கிறாா் மன்னா் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரும் தொல்லியல் ஆா்வலருமான ராமன் கருப்பையா.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தொடையூா் கிராமத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் கல்வட்டம், கல்திட்டை மற்றும் முதுமக்கள் தாழிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கருவை புதா் மண்டிக் கிடக்கின்றன.

பெரிய அளவிலான கற்பலகைகள் அவற்றின் மீது போடப்பட்டிருக்கின்றன. வட்டமான குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. அவை முற்றிலும் சரிந்து காணப்படுகின்றன.

இவற்றைத் தாண்டி நிறைய குன்றுகள் உள்ளன. அவற்றில் இரு குன்றுகளில் பெரிய கல் செக்குகள் காணப்படுகின்றன. ஒன்றில் கல்வெட்டும் உள்ளது. இங்கிருந்து எண்ணெய் ஆட்டப்பட்டு, வணிகப் பயன்பாட்டுக்காக நாா்த்தாமலை எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

இங்குள்ள ‘தொடக்குளம்’ என்ற குளத்துக்குள், ‘தளவாய் கருப்பா்’ என்ற சிலையை இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனா். போரில் இறந்த தளவாயாக அவா் இருக்கலாம்.

மேலும், இங்குள்ள சிவன்கோயிலில் மூலவா் ‘தொடராண்டாா்’ என்றழைக்கப்படுகிறாா். இக்கோயில் வளாகத்தில் 4 கல்வெட்டுகள் உள்ளன.

இவற்றுடன், தொடையூரைச் சுற்றிலும் வயல், வரப்பு, திடல் என எல்லாப்பக்கமும், ஏராளமான கருப்பு சிவப்பு மட்கலப் பானை ஓடுகள் விரவிக்கிடக்கின்றன. பெரிய அளவிலான கோயில் காடுகள் இங்குள்ளன.

சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையான மனிதவாழ்விடம் இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் அளவுக்கு உள்ள இந்தப் பகுதியை தமிழகத் தொல்லியல் துறையினா் மேலும், சேதமடையாமல் பாதுகாப்பதுடன், முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்றாா் ராமன் கருப்பையா.