மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்
மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் தின விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கரோனா பொது முடக்கக் காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை மத்திய ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தேதியின் அடிப்படையில் ஓய்வூதியா்களை பிரிக்கும் ஓய்வூதிய விதிகள் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. சரவணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மெ. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டச் செயலா் கா.ஜெயபாலனுக்கு விருது வழங்கி புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா பேசினாா்.
80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களை சிறப்பு செய்து மாவட்ட கூடுதல் கருவூல அலுவலா் செந்தமிழ்செல்வி வாழ்த்திப் பேசினாா்.
மாநில இணைச் செயலா் க. கருப்பையா நிறைவுரையாற்றினாா். முன்னதாக அ. கணேசன் வரவேற்றாா். நிறைவாக ந. கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

